ஜெயிலர் விமர்சனம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான படம் “ஜெயிலர்”.
ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்களுக்கு அந்தளவுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் தான் இருந்தது, ஆனால் இசை வெளியீட்டில் ரஜினி பேசியது மிகுந்த பரபரப்பாகி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஜெயிலர் பக்கம் திருப்பியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ஜெயிலர் படம் வென்றதா? என்றால், ஆம் வென்றது என்றெ சொல்லலாம். ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட எந்திரன் படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம் கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தில் இருந்த கைதிகளுக்கு இந்த ஜெயிலர் சரியான தீனிபோட்டுள்ளார்.என்று தான் சொல்லவேண்டும்.
எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் ஒரு நல்ல கணவனாக, தந்தையாக, தாத்தாவாக தன் நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி. மலையாளம் கன்னடம் ஹிந்தி என 3 சூப்பர்ஸ்டார்களுக்கும் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து (ஜாக்கி ஷெரப், மோகன்லால், சிவராஜ்குமார்) அதகளப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் அதுக்காகவே இந்த படத்தை திரையரங்கு சென்று பாக்கலாம்.
அனிருத் பின்னணி இசை தான் படத்திற்கு பெரிய பலம், ஒவ்வொரு காட்சியிலும் சும்மா தெறிக்குது அவர் இசை.
சிலை திருட்டு வழக்கை கையில் எடுத்து நேர்மையாக பணியாற்றி வரும் உதவி கமிஷனர் வசந்த் ரவி திடீர் என்று காணாமல் போக அவரை தேடி அவரது தந்தை ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் காவல் நிலையம் சென்று கமிஷனரிடம் அணுகும் போது, ஆய்வாளர் அறந்தாங்கி நிஷா வழியாக தன் மகன் சிலை திருட்டு வழக்கில் உள்ள முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவர்களை பழிவாங்குவதே கதை.
மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருக்கிறார். அவர் ரஜினியுடன் சந்திக்கும் அணைத்து காட்சிகளும் மிரட்டல்.
யோகி பாபு, VTV கணேஷ் போன்றவர்களை இன்னும் கொஞ்சம் நன்கு பயன்படுத்தி இருக்கலாம். சுமன் மற்றும் தமன்னா காட்சிகள் நம்மை வெறுப்படைய செய்கிறது. காவாலா பாட்டுக்கு தான் அந்த காட்சிகள் என்றால் அந்த காட்சிகளை முழுமையாக வெட்டிவிட்டு காவாலா பாடலை படம் முடிந்தவுடன் கடைசியாக சேர்த்து கொள்ளலாம்.
மகனின் சாவுக்கு பழிவாங்க தேடி செல்லும் கதையில் கடைசியில் மகன் உயிரோடு இருக்கிறார் என்று தெரிகிறது. மகனை காப்பாற்றுகிறாரா அல்லது பலிகொடுக்கிறாரா இது தான் மீதி உள்ள கதை.
மொத்தத்தில் முத்துவேல் பாண்டியனின் ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வெறித்தனமான படம் . சினிமா ரசிகர்களுக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய ஒரு நல்ல படம்.
டமாரம் ரேட்டிங் : ⭐⭐⭐ 3 / 5
#Jailerreview | #Jailer | #Damaaram | #Rajini